தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு மத்தியிலும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று காலை 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெற்றன என்று ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மருத்துவம், துறைமுகம், மின்சாரம், நீர்ப்பாசனம், அஞ்சல், வங்கி மற்றும் கல்வி உள்ளிட்ட 40 துறைசார் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன.
இதேவேளை, வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால் இயல்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையால் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டது.
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையானது மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையானது நூற்றுக்கு 10 வீதமாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அஞ்சல் துறையினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையா அஞ்சல் வளாகங்கள் வெறிச்சோடிக் காட்சியளித்தன.
அத்துடன் நாட்லுள்ள பல பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைளுக்காக திறக்கப்படவில்லை என்பதோடு, சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்து மீண்டும் திரும்பிச் சென்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பணிப்புறக்கணிப்பால் மலையகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொதுப்போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.