நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் முழுமையாக இணைந்துகொள்வதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“அடக்குமுறைகளையும் வரிச்சுமைகளையும், விலைவாசி உயர்வுகளையும், கட்டணங்களின் அதிகரிப்புகளையும் எதிர்த்து நாடளாவிய ரீதியில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்துகின்ற ஜனநாயகப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
அதிபர், ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகள் இன்னமும் தீர்க்கப்படாமை, பாடசாலை செல்வதற்கான போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, வங்கி கடன் வட்டி வீதங்களின் அதிகரிப்பு, மாணவர்களின் போசாக்கு குறைபாடு, கற்றல் உபகரணங்களின் விலை உயர்வு, பொதுப் பரீட்சை மதிப்பீட்டின் முக்கியத்துவத்தை உணராமை, அதற்கான கொடுப்பனவுகளை அதிகரிக்காமை போன்ற கல்விப்புல பிரச்சினைகளையும் முன்வைத்து நாளை புதன்கிழமை நாடளாவிய போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழுமையாக இணைந்து கொள்வதோடு அன்றைய நாள் அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்குச் செல்லாது தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது” – என்றுள்ளது.
இதேவேளை, ஆசிரியர் சேவை சங்கமும் நாளைய போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.