யாழ். நாகர்கோவிலில் பொலிஸார் – மக்கள் மோதல்! – துப்பாக்கிச்சூட்டால் பதற்றம் (Photos)

Share

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கிச்சூட்டில் முடிவடைந்தது.

துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டு , அப்பகுதிகளில் துப்பாக்கிச் சன்னங்களின் வெற்றுக்கோதுகள் காணப்படுகின்ற போதிலும், பொலிஸார் தாம் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று தெரிவித்தனர்.

அவ்வாறாயின் யார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் எனவும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை விட வேறு நபர்களிடம் துப்பாக்கிகள் உள்ளனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும், அதனால் தாம் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, அப்பகுதியில் உள்ள முருக மூர்த்தி ஆலய சப்பர கொட்டகைக்குத் தீ வைக்கப்பட்டதில் , கொட்டகை முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாகர்கோவில் பகுதியில் மயானம் ஒன்றைச் சுற்றி மதில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற இருந்தது.

அந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மதில் கட்டுவது தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு மதில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த புலம்பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் மீது ஊரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விசாரணைக்காகச் சென்ற பொலிஸ் குழுவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அது பின்னர் கைக்கலப்பாக மாறியது.

அதன்போது பொலிஸார் பெண்கள், சிறுவர்கள் எனப் பேதம் பார்க்காமல் அனைவரும் மீதும் கடுமையான தடியடி மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதன்போது துப்பாக்கிச்சூடுகளும் நடத்தப்பட்டன. ஆனால், தாம் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக இன்று மயான மதில் அமைப்பதில் முரண்பட்ட தரப்பினரைப் பொலிஸ் நிலையத்துக்குப் பொலிஸார் அழைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு