வடக்கில் காணிப் பதிவில் பாரிய மோசடி! – வெகுவிரைவில் அம்பலப்படுத்துவோம் என்று செல்வம் எச்சரிக்கை

Share

“வடக்கு மாகாணத்தில் காணிப் பதிவு விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பாரிய மோசடிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான காணி உறுதிப்பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் தொடர்பான விபரங்களை வெகுவிரைவில் அம்பலப்படுத்துவோம்.”

– இவ்வாறு ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் பேசுகையில்,

“நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமானால் முதலில் ஊழல், மோசடி நிறுத்தப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் காணிப் பதிவு விவகாரத்தில் பாரிய மோசடிகள் இடம்பெறுகின்றன. யுத்த காலத்தில் அரச அதிகாரிகள் முறையாகச் செயற்பட்டார்கள். ஆனால், தற்போது ஒருசில அதிகாரிகள் முறையற்ற வகையில் செயற்படுவதால் ஒட்டுமொத்த அரச அதிகாரிகள் மீதும் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, காணி உறுதிப்பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் தொடர்பான விபரங்களை வெகுவிரைவில் அம்பலப்படுத்துவோம்.

2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு அல்ல என ஜனாதிபதியும், அரசும் குறிப்பிடுகின்ற நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயித்துள்ளது. தேர்தல் விவகாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கும், அரசின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம். சர்வதேசமும் இதனையே வலியுறுத்துகின்றது.13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்படும் என அரசு சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்குகின்றது. ஆனால், வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுவதில்லை.

பொருளாதார மீட்சிக்காக அரசு எடுத்த ஒரு சில தீர்மானங்களால் நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். சிறந்த விடயங்களை முழுமையாக வரவேற்போம். நாட்டில் மருந்து உட்படப் பல பிரச்சிகைள் காணப்படுகின்றன. ஆகவே, அப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும்.

அண்மையில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 ரூபாவாக நிர்ணயிப்பதாகக் குறிப்பிட்டார். வடக்கு மாகாண விவசாயிகள் செல்வந்தர்கள் அல்லர். காணி, நகை ஆகியவற்றை அடகு வைத்து, கடனாளியாக விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். ஆகவே, நெல்லுக்கான உத்தரவாத விலையை 120 ரூபா அல்லது 130 ரூபா என நிர்ணயிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.

 

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு