யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் தேர்வு இன்று நடைபெறவுள்ளது.
சபைக்குப் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்ட இ.ஆனோல்ட் முன்வைத்த வரவு – செலவுத் திட்டம் 14 நாட்களுக்குள் அடுத்தடுத்துத் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவியிழந்தார்.
இதைத் தொடர்ந்து புதிய மேயருக்கான தெரிவு நடக்கும் என்று உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.
ஒரு சபையில் 50 வீதத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சி சார்பில் முன்னிறுத்தப்படும் இரண்டு மேயர்களதும் வரவு – செலவுத் திட்டங்கள் அடுத்தடுத்துத் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே சபை கலையும் என்றும், அத்தகைய ஒரு நிலை யாழ்ப்பாணம் மாநக சபையில் இல்லை என்றும் கூறப்படுவதால் புதிய மேயர் தெரிவை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்றைய தினம் புதிய மேயர் தெரிவு இடம்பெறும் என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்திருந்தார்.
45 உறுப்பினர்களைக் கொண்டுள்ள யாழ். மாநகர சபையில் மேயர் தெரிவுக்கு 23 பேருக்குக் குறையாமல் ஆதரவு இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.