வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விரு மாதங்களிலும் சுமார் 173 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், முறைப்பாட்டாளர்களிடம் இருந்து அறவிடப்பட்டிருந்த பணம் 126 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வௌிநாட்டு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காகச் சட்டவிரோத நிறுவனங்கள் மற்றும் முகவர்களிடம் பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான நபர்கள் தொடர்பில் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.