நாட்டின் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கூறியுள்ளார்.
‘த ஹிந்து’ பத்திரிகை வெளியிட்ட செய்தியில், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதாரப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை வங்கி, இந்திய அரச வங்கி மற்றும் இந்தியன் வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாவைப் பயன்படுத்துவதன் மூலம் குறைவான பரிமாற்ற செலவு, விரைவான சேவை, வர்த்தகக் கடன்களை எளிமையாகப் பெறுதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும் இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் கணிசமான அளவில் வருமானம் ஏற்படும் என்பதுடன் நட்புறவு மேலும் நெருக்கமாகும் எனவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்ததாக ’த ஹிந்து’ தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வழங்கிய நேர்காணலில், “இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணய அலகாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்தியப் பிரஜைகள் அவர்களது பணத்தை நேரடியாக இலங்கையில் பயன்படுத்த முடியும் என்பதுடன் இலங்கையர்கள் வேறு நாணயங்கள் மீது தங்கியிருக்காமல் செயற்பட முடியும்” – என்று சுட்டிக்காட்டியுள்ளார்.