கச்சதீவில் களவெடுப்பதற்குத் தனிப்படகில் வந்த கும்பல்! – ஒருவர் சிக்கினார்; 9 பேருக்கு வலைவீச்சு

Share

கச்சதீவு பெருந்திருவிழாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் சேர்ந்தியங்கிய 9 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நெடுந்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் ஆகியோர் தெரிவித்ததாவது:-

“கச்சதீவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளோம். அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தினோம். எதிர்வரும் 14ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரினதும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரினதும் 12 பவுண் நகைகளே களவாடப்பட்டுள்ளன.

இதேவேளை, கச்சதீவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் தங்க ஆபரணத்தை ஒருவர் அறுத்துச் சென்ற நிலையில் அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டார். ஆனால் அவரிடமிருந்து நகைகள் எவையும் மீட்கப்படவில்லை.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், மன்னாரின் பியர் கடற்கரையிலிருந்து தனியான படகில் 10 பேர் கச்சதீவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகப் பெண்ணிடம் அறுத்த தங்க நகையை தனது மனைவியிடம் கொடுத்துள்ளதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் பொலிஸாரிடம் பிடிபட்டத்தைத் தொடர்ந்து அவருடன் வந்த மனைவி உள்ளிட்ட ஏனைய 9 பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

வவுனியா மாவட்டத்திலேயே அவர்கள் தற்காலிகமாக வசித்து வருகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில், வவுனியாப் பொலிஸார் ஊடாக தேடுதல் நடத்தப்பட்ட போதும் அவர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” – என்றனர்.

இதேவேளை, கச்சதீவில் அமைக்கப்பட்டிருந்த மலசலக்கூட குழியினுள் பெண் ஒருவர் தனது தங்கச் சங்கிலியை தவறுதலாக வீழ்த்தியிருந்த நிலையில் கடற்படையினரின் உதவியுடன் அது மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு