மலையகத்தில் மாற்று அரசியல் கலாசாரம் மிகவும் அவசியம்! – திலகர் வேண்டுகோள்

Share

“மலையகத்திலே படித்தவர்கள் அரசியலிலே பங்கேற்பதல்லை என்கின்ற மாயையை உருவாக்கி தாங்கள்தான் சகலருக்கும் தலைமை கொடுக்கின்றோம் என மரபுசார் அரசியல் தலைமைகள் பொய்யான புனைவு அரசியலை முன்வைத்து வருகின்றன. ஆனால், உண்மை நிலை அதுவல்ல. மலையகத்திலே ஆரம்பத்தில் இருந்தே அறிவார்ந்த அரசியலை முன்வைத்துச் செயற்பட்ட பல ஆளுமைகளை அடையாளம் காட்ட முடியும். மலையகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதில்லை எனும் பொய்யான மாயையை உருவாக்கி அவ்வாறு வருபவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள் என்பதே மெய் என்பதை அரசியல் மட்டத்தில் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மலையகத்தில் மாற்று அரசியல் கலாசாரம் மிகவும் அவசியம்.”

– இவ்வாறு மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வேண்டுகோள் விடுத்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிறுத்தி அக்கரப்பத்தனை பிரதேச முதன்மை வேட்பாளரும்
ராணிவத்தை வட்டார வேட்பாளருமான இளம் பட்டதாரி நீலா பன்னீர்செல்வத்தை ஆதரித்து பெரிய ராணிவத்தை, மவுசால்ல தோட்டங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் எம்.பி. திலகராஜா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“மலையகத்தில் படித்தவர்கள் அரசியலில் பங்கேற்பதில்லை எனும் பொய்யான கருத்தை முன்வைத்து புனைவு அரசியல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1920 களில் மலையகத்தில் அரசியல் செயற்பாட்டு தொடக்கத்தை வழங்கி சட்டசபையிலும் அரசவையிலும் அங்கம் வகித்த மலையக தேச பிதா கோ. நடேசய்யர் கற்றறிந்த ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமாவார்.

1936 ஆம் ஆண்டு தொழில் மற்றும் வாணிப அமைச்சராக இருந்த கண்டி பன்விலையைச் சேர்ந்த மலையகத்தவரான பெரி.சுந்தரம் என்பவராவார். அவர் அந்த நாளிலேயே லண்டன் பரிஸ்ட்டர் எட் லோ எனும் பட்டம் பெற்றவர்.

1947 ஆம் ஆண்டு நாடாளுமன்றில் உறுப்பினராக இருந்த ஜி. ஆர். மோத்தா, டி. ராமானுஜம், சி.வி. வேலுப்பிள்ளை போன்றவர்கள் கற்றறிந்த அறிவார்ந்த அரசியல் முன்வைப்புகளைச் செய்தவர்களே. அவர்களது விவாதங்களை ஹன்சார்ட் அறிக்கையிலே கண்டு வியந்து இருக்கின்றேன்.

1960 களில் வி.கே. வெள்ளையன் போன்ற கல்வியாளர்கள் தொழிற்சங்கத் தலைவர்களாகச் செயற்பட்டார்கள். தேர்தலிலும் அவர் போட்டியிட்டார். இலங்கை திராவிட இயக்க முன்னோடி ஏ. இளஞ்செழியன், பாடசாலை அதிபர் சட்டத்தரணி இரா. சிவலிங்கம் போன்றோர் மலையகத்தலே காத்திரமான அரசியலை முன்வைத்தவர்களே.

1980 களில் வி.டி. தர்மலிங்கம், பி.ஏ. காதர், மு. சிவலிங்கம், ஏ. லோறன்ஸ் போன்றவர்கள் அரசியலில் முனைப்புடன் செயற்பட்டவர்களாவர்.

1990 களில் பி.பி.தேவராஜ் போன்றவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக இருந்தார்கள். அவர் இலண்டனில் உயர் கல்வி கற்கப் போய் அரசியல் ஈர்ப்பால் அதனையே தொடர்ந்தவர்.2010 ஆண்டு நாடாளுமன்றத்திலும் கூட சட்டத்தரணி இராஜதுரை அங்கம் வகித்தார்.

இவ்வாறு எல்லாக் காலத்திலும் மலையகத்தில் கற்றிவாளர்களின் அரசியல் பிரசன்ன்னம் இருந்து வந்துள்ளது. ஆனால், அவ்வாறு முன்வருபவர்களைக் கொண்டு மலையகத்தில் அறிவார்ந்த அரசியலை முன்கொண்டு செல்லாமல் தமது அரசியல் அதிகார பலத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மலையகத்திலே படித்தவர்கள் அரசியலிலே பங்கேற்பதில்லை என்கின்ற மாயையை உருவாக்கி தாங்கள்தான் சகலருக்கும் தலைமை கொடுக்கும் அரசியல் தலைமைகள் என மரபுசார் அரசியல் தலைமைகள் பொய்யான புனைவு அரசியலை முன்வைத்து வருகின்றனர்.

அறிவார்ந்த அரசியல் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்வைப்போர் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளார்கள். ஒரேயொரு முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி நுவரெலியா மாவட்டத்தின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என சான்று வாங்கிய எனக்கு அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேசியப்பட்டியலில் வாய்ப்பு வழங்குவதாகத் திட்மிட்டப்பட்ட அடிப்படையில் என்னை வெளியேற்ற நினைத்தார்கள்.

என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற அவர்களால் முடியாது. நான் பிறந்ததில் இருந்தே அரசியல்வாதி. இறக்கும் வரை அரசியல்வாதி . மாற்று அரசியல் கதைகளைப் பேசிக் கொண்டு இருக்காமல் அதனைக் களத்தில் இறங்கி செய்துப் பார்ப்பவன். வாடகைக்கு வாகனம் அமர்த்தி ஆதரவாளர்களை மண்டபத்துக்கு அழைத்து பேசி விட்டுச் செல்வது அல்ல எனது அரசியல். மக்களைத் தயக்கமின்றி களத்துக்குச் சென்று சந்தித்து எனது கருத்துக்களை முன்வைப்பவன்.

அத்தகைய ஒரு முயற்சியாகவே மலையக அரசியல் அரங்கத்தைத் தொடங்கி இருக்கின்றேன். அரங்கத்தில் பல நூறு மாணவர்கள் அரசியல் பயில்கின்றார்கள். அவர்கள் தேர்தல் களத்திலும் இறங்கியுள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவு தேடி ஊர் ஊராகப் பயணிக்கின்றேன். பிரசாரம் செய்கின்றேன்.

மலையகத்திலே மாற்று அரசியல் அரசியல் கலாசாரம் ஒன்றை வேண்டி நிற்கும் மக்களுக்கு மலையக அரசியல் அரங்கம் ஒரு தெரிவாக இருக்கின்றது. அதனை ஆதரிக்குமாறு வேண்டுகின்றோம்” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு