உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுத்து நிறுத்துவதற்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
கித்துல்கல பிரதேசத்தில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உயர் நீதிமன்றம் நேற்று (3) நிதிச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமா அதிபர் ஆகியோர் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 2023 வரவு – செலவுத் திட்டத்தால் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பீ.பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அரசு அச்சகத்திடம் இருந்து எந்தவொரு நிதியையும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் மற்றொரு இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில், விண்ணப்பம் மே 26 ஆம் திகதி முதல் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.