அரசின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியாக இன்று இடம்பெற்றுவரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் வவுனியாவிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
நாட்டில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறும் தொழில் வல்லுநர்களிடமிருந்து 6 வீதம் முதல் 36 வீதம் வரை வரி அறவிடப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புதிய வரித்திருத்தத்தை மறுசீரமைப்புக்கு உட்படுத்துமாறு கோரியும் தொழிற்சங்க கட்டமைப்புக்களால் நாடளாவிய ரீதியில் குறித்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைகளுக்காகச் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களைச் சந்தித்துள்ளனர்.
இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவின் பிரதான வங்கிகளின் செயற்பாடுகளும் இன்று தடைப்பட்டுள்ளன. இதனால் தூர இடங்களில் இருந்து வங்கிச் சேவைகளுக்காக வருகை தரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.