“முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராகத் தொடர்ந்தும் செயற்படுகின்றார். அவர் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க விரும்பவில்லை.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் கூறுகையில்,
“பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன சிறப்பாக செயற்பட்டு வருகின்றார்.
கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு, அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள சன்ன ஜயசுமனவே, இப்படியொரு கருத்தை சமூகமயப்படுத்தினார். அதில் எவ்வித உண்மையும் இல்லை.
மஹிந்தவைப் பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை மக்கள் செய்வார்கள். கட்சிக்குள் அவருக்கு ஆதரவாளர்களும் உள்ளனர். எனினும், பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக எவ்வித கலந்துரையாடலும் கட்சிக்குள் இடம்பெறவில்லை. தற்போதைய பிரதமருடன் எமக்கு சிறந்த நல்லுறவு உள்ளது” – என்றார்.