“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அது ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தும். எனவேதான் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த ரணில் விக்கிரமசிங்க முற்படுகின்றார். இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வேறு எந்த வாக்கெடுப்பையும் நடத்துவது மோசமானது என ஜனாதிபதி நினைக்கின்றார்.”
– இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“தேர்தலைப் பிற்போடுவதற்கு அரச அச்சக அதிகாரி மீது சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துகின்றனர். ஏனையோர் திறைசேரி செயலாளரைக் குற்றம் சாட்டுகிறார்கள். தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பவர்களும் உள்ளனர். ஆனால், அரச அதிகாரிகளைக் குறை சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் சுற்றறிக்கைகள், அமைச்சரவை முடிவுகள் மற்றும் அமைச்சரின் உத்தரவுகளின்படி செயற்படுவதற்கு சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள்.
அதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியளவில், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைப்பதாகச் சிலர் கூறுகின்றனர்” – என்றார்.