கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 3 ஆம் திகதி ஆரம்பம்!

Share

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 3 ஆம்,4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அ .சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இம்முறை திருவிழா நடைபெறவுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணி முதல் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரையில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்வரும் 3 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணி முதல் முற்பகல் 10 மணி வரை குறிக்கட்டுவான் வரை அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன், அதிகாலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை குறிக்கட்டுவான் முதல் கச்சதீவுக்கான படகு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, போக்குவரத்துக் கட்டணமாக 2 ஆயிரம் ரூபா அறவிடப்படவுள்ளது.

மேலும், வெளிமாவட்டங்களிலிருந்து தங்களது சொந்த படகுகளில் வருகை தருபவர்கள், வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடற்படை முகாமில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, 3 ஆம் திகதி மாலை 6 மணிக்கு முன்னதாக கச்சதீவைவந்தடையும் வகையில் பயணத்தை ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

கச்சதீவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு காலை உணவைக் கடற்படையினர் வழங்கவுள்ளதோடு, மது பாவனைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி மதுபானங்களைக் கொண்டு செல்லும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு