“கொழும்பு – காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ ஹோம் போன்று நாடு முழுவதும் 120 ஐ அமைத்து ‘மொட்டு’வின் 120 எம்.பிக்களை அவர்களின் குடும்பங்களுடன் ஒரே இரவில் கொல்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.”
– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் கூறுகையில்,
“எம்.பிக்கள் பலரின் உத்தியோகபூர்வ இல்லங்களில் ஜே.வி.பியினர் திருட்டுத்தனமாகத் தங்கி இருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. எங்களது வீடுகளை எரித்தவர்கள் இவர்கள்.
இந்த நாட்டுக்கு அநியாயம் செய்தவர்கள் இவர்கள். இவர்களுக்கு வாக்கு வங்கி கிடையாது.
ஜே.வி.பி. உறுப்பினர்கள் அனைவரினதும் பிள்ளைகள் படித்தது வெளிநாட்டில்தான்.
திம்புலாகல பிரதேச சபைக்கு ஜே.வி.பி.யில் போட்டியிடும் உறுப்பினர் ஒருவர் சாராயக் கடைக்குச் சொந்தக்காக்காரர்.
அனைத்துக் கட்சிகளிலும் பிழை செய்பவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், ஜேவி.பி. மட்டும் தப்பு செய்யாதவர்கள் போல் நடிக்கின்றார்கள்.
நாம் மிகவும் திறமையுள்ள – அனுபவமுள்ள ஒருவரைத்தான் ஜனாதிபதியாக நியமித்துள்ளோம். இப்போது பொருளாதார நிலைமை மெல்ல மெல்ல சரியாகிக்கொண்டு வருகின்றது.
பயங்கரவாதிகள் சிலர் பலவந்தமாக நாட்டைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்த நேரம் அது. நாடாளுமன்றத்தை பலவந்தமாகக் கைப்பற்ற முயற்சி செய்தார்கள். அவ்வாறு நடந்திருந்தால் நாடு எங்கேயோ சென்றிருக்கும்.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ ஹோம் போன்று நாடு முழுவதும் 120 ஐ அமைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 120 எம்.பிக்களை அவர்களின் குடும்பங்களுடன் ஒரே இரவில் கொல்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. இதன்பின்னணியில் ஜே.வி.பியினர் இருந்தார்கள்” – என்றார்.