மக்களால் மக்களுக்காக நடாத்தப்படும் மக்களாட்சியே ஜனநாயகம் என்று ஜனநாயகத் தலைவரான ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டுள்ளார் என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
ஜனநாயக ஆட்சிக்கு காலத்திற்குக் காலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேவையாக உள்ளனர். அவ்வாறு தெரிவு செய்வதற்கு ஊழல் மோசடிகளற்ற தேர்தல்கள் அவசியமானது.
தேர்தல்களற்ற, மக்கள் பிரதிநிதிகளற்ற ஆட்சி முறை ஆபத்தானது மட்டுமல்ல, பொறுப்பற்றதுமாகும். எமது நாட்டில் நான்கு வகையாக ஜனநாாக அரச நிறுவனங்கள் ஆட்சி செய்கின்றன. உள்ளூராட்சி, மாகாண சபை, நாடாளுமன்றம், ஜனாதிபதி சார் கட்டமைப்புகளே அவையாகும்.
இன்று இவற்றைச் சற்று நோக்க வேண்டியுள்ளது. மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ளது. அங்கு மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுனர்கள், மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியின் நியமனம் மூலமாகப் பதவியேற்று ஜனாதிபதியின் விருப்புக்கேற்ப செயற்படுகின்றார். இங்கு மக்கள் ஜனநாயகம் இல்லை.
உள்ளூராட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டன. வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை முறைப்படி தாக்கல் செய்தனர். பிரசாரங்களும் மேற்கொண்டனர். ஆனால், ஜனாதிபதியின் செயற்பாட்டினால், உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள் நிறுத்தபட்டுள்ளன.
உள்ளூராட்சி சபைகள் மக்களால் தெரிவு செய்யப்படாத ஆணையாளர்கள், செயலாளர்களால் ஆளப்படுகின்றன.
மேலும் 2019,2020 களில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, நாடாளுமன்றம் என்ற அமைப்புகளை 2022 இல் நடைபெற்ற மக்கள் போராட்டம் (அரகலய) நிராகரித்தது.
இதனால், அப்போதைய ஜனாதிபதி கோத்தா நாட்டை விட்டு ஓடி மறைந்தார். அடுத்து அரகலயப் போராட்டம் நாடாளுமன்றம் நோக்கி நகர்ந்தது. அந்த நகர்வு படையினரின் பலத்த பிரத்தயத்தனத்தால் கட்டுப்படுத்தப்பட்டது.
அந்த வகையில், மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற ஆளும் தரப்பினர் யாவரும் மக்கள் போராளிகளால் நிராகரிக்கப்பட்டனர்.
அதே வேளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி வெளியேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் மூலமாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்றம் மூலமாக,புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார். ஆயின் அவரும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை என்றுதான் கொள்ள வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். அவர் பின்னர், தேசியப்பட்டியல் மூலமாகவே நாடாளுமன்றம் சென்றிருந்தார்.
மொத்தமாகப் பார்த்தால், தற்போது மக்களால் தெரிவு செய்யப்படாத அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்டமைப்புகளே ஆட்சி செய்கின்றன.
எனவே மக்களால் தெரிவ செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு வருவதற்கு உடனடியாக ஜனாதிபதி, நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சித் தேர்தல்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடாத்தப்பட வேண்டும்.
தற்போது நடைபெற வேண்டிய ஜனாதிபதித் தேர்தலையும் முடக்குவதற்கு முனைந்தமை ஜனநாயகத்திற்கு எதிர்மறையான போக்காகவே அமையும்.
இந்தத் தேர்தலற்ற ஜனநாயகம் மக்களுக்குத் தேவையற்ற ஜனநாயகமாகும் என்பதே மக்களில் நிலைப்பாடாகும்.