தேர்தலுக்கு சோதிடம் பார்க்கிறதா தேர்தல் ஆணைக்குழு?

Share

ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக் குழுவுக்குக் கிடைத்து 48 மணித்தியாலங்களுக்கு மேலாகச் சென்று விட்டது. ஆனால் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ரத்நாயக்க தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதில் காலதாமதத்தை ஏற்படுத்த விரும்புகிறாரா? என்ற கேள்வி எழுகின்றது என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன் கருத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்தமை தொடர்பாக கருத்து தெரிவக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்

குறிப்பாகத் தேர்தலை நடாத்துவதற்கு அவர் சுப நேரம் தேடுவதாகக் கூறுகின்றார்.அவரது கதையிலே பார்த்தாலும்,தனக்கு அதிகாரம் கிடைக்கும் காலம் எதுவென்று அவருக்கு நன்கு தெரியும். எனவே, அவர் முன்கூட்டியே சோதிடர்களைச் சந்தித்து சுப நேரத்தைக் கூடக் கண்டுபிடித்திருக்க முடியும்.

தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் கிடைத்த பின்னர்தான் தேர்தலுக்கான சுபநேரம் தேட வேண்டும் என்று சோதிடர் யாரும் அவரிடம் சொன்னார்களோ தெரியவில்லை.

ரத்நாயக்க அவர்களை தேர்தல் ஆணைக்குழுத் தலைவராக நியமித்ததிலும் பார்க்க, ஒரு சோதிடரை தலைவராக நியமித்திருக்கலாம் என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.

கொரோனாக் காலத்தில் ஒரு தடவை கொரோனாவைத் தடுப்பதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்திரா, களனிப் பாலத்தில் நின்றவாறு ஆற்றினுள் முட்டியை வீசினார். அதுவும் கூட சோதிடமாகவே இருக்க முடியும்.எதுவும் தீரவில்லை.அதே போன்று பாராளுமன்றத்தினுள் சில முக்கியஸ்தர்கள் கொரோனாத் தடுப்புக்காக தம்மிக்கவின் பாணியை அருந்தினர்.கொரோனா தீரவில்லை.

இப்படியான சம்பிரதாயத்தில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல,அதிகாரிகளும் ஊறிப்போய் விட்டார்கள். ஆனால் எதுவும் வெற்றி அளிப்பதில்லை.

அநுராதபுரத்தில் ஞானக்கா எனன்ற பெண் சோதிடர் ஒருவரிடம் சோதிடம் பார்த்து சுபநேரத்தில் ஆட்சி அலுவல்களைத் தொடங்கியவர்கள் இரண்டாண்டு முடிவதற்குள் அதிகாரத்தை இழந்தனர்.

அந்த ஆட்சியாளர்கள் அரகலயப் போராட்டத்தினை முறியடிப்பதற்கும் சோதிடரின் மந்திரித்த நீரை அங்கு தெளித்ததாகத் தகவல்கள் வந்தன.ஆனால் இந்த சித்து விளையாட்டுகள் யாவும் தோல்வியில் முடிந்தன.

இவற்றைக் கற்றுக் கொண்ட பின்பும் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் சோதிடக் கணிப்புகளை நாட நினைக்கிறாரா? என்ற கேள்வி எழுகின்றது. போகின்ற போக்கில் பார்த்தால் கபினட் அந்தஸ்துள்ள சோதிட அமைச்சின் தேவைப்பாடு அரசினால் உணரப்படுகின்றதோ தெரியவில்லை.

ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பும் தேர்தல்களை வேப்பங்காயாகவே பார்க்கின்றனர்.

அது போல் அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு காட்டும் அதிகாரிகளும் அப்படித்தான் நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தை தேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் சுபநேரக் கருத்து ஏற்படுத்தியுள்ளது.

அப்படி சுபநேரம் பார்ப்பதாக இருந்தாலும் சத்தம் போடாமல் அதனையும் பார்த்து இதுவரை அறிவித்திருக்கலாம்.

நாடாளுமன்றத்தில் 22வது திருத்தத்திலுள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு ஒரு திருத்தப் பிரேரண கொணரப்பட்டு அதனை நிறைவேற்றுவதற்குரிய அவகாசத்தை தேர்தல் ஆணையாளரின் சுப நேரக்கண்டு பிடிப்பு வழங்கப் போகின்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முன்பு உள்ளூராட்சித் தேர்தல் விடயத்தை நடாத்துவதற்கு முன்பிருந்த தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் துணிந்து முயற்சித்தார்.அதனைக் குழப்புவதற்கு என்று அந்த ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் அதிவிசுவாசி ஒருவர் செயற்பட்டார். அந்தக் குழப்பத்தை ஏற்படுத்தியவர் பின்னர், மகாணம் ஒன்றுக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டார்.

பெரிய மரத்தை சுற்றிப்படரும் கொடிக்கு நன்மை கிடைக்கத்தான் செய்யும்.மரத்தைச் சுற்றிப்படர விரும்பாத பல கொடிகள் மரத்திற்கு எதிராகப் போராடித்தான் ஆக வேண்டும். அந்தப் பெரியமரம் தேர்தல் காற்றில் சாய்ந்தால் பல கதிரைகளும் சாய்ந்து விடலாம். என்ன செய்வது கொடிகள் பாவந்தான்.

இப்போது நீதியமைச்சர் ஒரு கருத்தினைச் சொல்லிவிட்டார். தேர்தலை இழுத்தடிக்கக் கூடிய விதத்தில் நாடாளுமன்றத்தில் 22 வது திருத்தத்திற்குரிய குறை தீர்த்தல் பிரேரணை தேர்தலுக்கு முன்பாகத் கொண்டு வரப்படாது என்று கூறியுள்ளார்.

பொறுத்திருந்து பார்ப்போம். ஜனாதிபதி ரணிலின் அடுத்த நடவடிக்கையின் நகர்வு எப்படி அமையவுள்ளது என்பதை. ஜனாதிபதித் தேர்தலை நீடிப்பதற்கான முயற்சிகள் இனியும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைத்து விட்டன.

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மாத இறுதிவரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சுப நேரத்தை இலகுவாக சில மிடங்களில் கண்டுகொள்ள முடியும். மும்மணிகளின் ஆசீர்வாதம் பெற்று 75 ஆண்டுகளாக சுபநேரத்தில் ஆட்சியை ஆரம்பித்த தலைவர்களால் நாட்டில் எதனையும் சாதிக்க முடியவில்லை.

இதனை ஆணைக் குழுத் தலைவர் விளங்கிக் கொள்வாரோ என்று பார்ப்போம். தோ்தல் திகதியைத் தீர்மானிப்பதிலும் அரசியல் தலையீடு உள்ளதை அறியமுடிகின்றது.

அறிவியல் யுகத்தில் அதிசயப் பிறவிகள் பலர் ஆட்சிப் பீடத்தையும் அதிகாரிகளின் நாற் காலிகளையும் அலங்கரிப்பதை அறியமுடிகின்றது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு