எப்படியாவது தான் கண் மூடுவதற்கு முன்பாக, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற வேண்டும் என்று முயற்சித்த சம்பந்தன் ஐயா ஏக்கத்தோடு, ஏமாற்றத்துடன் உயிரை விட்டார் என் மட்டக்களப்பு மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்ர ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
சம்பந்தர் ஐயா,68 ஆண்டுகள் தமிழ்த்தேசிய அரசியலிலும்,47 ஆண்டுகள் நாடாளுமன்ற அரசியல் பிரவேசத்தை உடையவர். தனது 91 ஆவது வயது கடந்த நிலையில்,30:06.2024 அன்று உயிர் நீத்தார்.
சுதந்திரத்திற்கு முன்பு 05.02.1933 இல் பிறந்த சம்பந்தன் ஐயா அவர்கள் இலங்கையை ஆட்சி செய்த ஒவ்வொரு சிங்களத் தலைவர்களையும் நன்கு அறிந்தவர் ஆவார்.
1977 இல் முதலாவதாக நாடாளுமன்றத்தில் பிரவேசித்தபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் அவர்களும் தனது 28 வது வயதில் முதலாவது நாடாளுமன்ற பிரவேசத்தப் பெற்றிருந்தார்.இதனை ரணில் அவர்கள் பல தடவைகள் நினைவு படுத்தினார்.இறுதி நிகழ்விலும் குறிப்பிட்டிருந்தார்.
ஜெயவர்தன பிரதமராக இருந்து ஜனாதிபதியான போதும் சம்பந்தர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.ஆரம்பக் காலத்தில் இருந்து இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இறுதிவரை, தமிழ்த்தேசிய மூத்த தலைவர் அர்ப்பணித்து இருந்தார்.
ஆனால், சிங்களத் தலைவர்கள் நாட்டைத் தோற்கடித்த பேரினவாதத்தால் சம்பந்தன் ஐயாவின் முயற்சிகளையும் தோற்கடித்தார்கள்.
தோல்விகள் தமிழ், முஸ்லிம்,சிங்கள மக்கள் அனைவரையும் பாதித்துள்ளன.நாட்டையும் பாதித்துள்ளது. ஆனால் சிங்களத் தலைவர்கள் மற்றும் ஒட்டுறவாடும் தமிழ்ப் பிரதிநிதிகள் செல்வத்தில் மிதக்கிறார்கள்.
அறகலயப் போராட்ட காலத்தில் சிங்கள மக்கள் இதனை ஓரளவு அறிந்தார்கள்.எதிர்வரும் தேர்தல்களில் சிங்கள மக்களின் எதிர்வினைகள் பிரதிபலிக்க வாய்ப்புண்டு. ஆனால் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் சிங்கள மக்கள் இப்போதும் பேரினவாதிகளின் பிடிகளில்தான் சிக்கிக் கிடக்கின்றனர்.
சம்பந்தன் ஐயா, பிரிபடாத இலங்கைக்குள் அகச் சுய நிருணய அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வில் உறுதியாக இருந்தார். அது கிடையாது விட்டால்,தமிழர்கள் புறச் சுயநிருணயத்தின் அடிப்படையில் தீர்வை நாட வேண்டி ஏற்படும் என்றும் சிங்களத் தலைவர்களிடம் கூறியிருந்தார்.ஆனால், சிங்கள உள்நாட்டுப் பொறிமுறையில் தமிழர்களுக்கான தீர்வு என்பது கானல் நீராகவே உள்ளது என்றார்.