இலங்கை ஜனநாயகம் என்பது இதுவரை மக்களுக்கான ஜனநாயகம் ஆகவில்லை எனவும் தன்னைத் தனிநாயகமாக்கும் இலங்கை ஜனநாயகம் எனவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
இனநாயகமாவும் சக்திமிக்க தலைவர்களின் தன்னல நாயகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. அதாவது ஆளுகின்ற தலைவர்கள் மக்கள் ஜனநாயகத்தை தத்தமக்கு வேண்டிய தனிநலநாயகமாக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
தற்போது ஜனாதிபதி ரணில் எந்தத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பதை தனது சுயநல நோக்கில்தான் கையாளுகின்றார்.
அவரது நல நோக்கில் நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடாத்துவது சுய இலாபத்தைத் தராது. அத்தேர்தலை நடாத்தினால் அவரது கட்சி பத்து வீதமான ஆசனங்களைக் கைப்பற்றுவதும் சவாலாகவே அமையும்.
அப்படியாகத் தேர்தலை நடாத்திவிட்டு ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினால், தோல்வி நிச்சயமாகி விடும். எனவேதான் ரணில் ஜனாதிபதித் தேர்தலை விரும்புகின்றார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான காலமும் வந்து விட்டது. தற்போது ஜனாதிபதியின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அதாவது இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி,மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும்,அதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் இருந்து கிடைக்கும் உண்மை என்னவென்றால், ஜனாதிபதியின் கட்சியானது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பதாகும்.
ஜனாதிபதி ரணில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தாமல் மக்கள் தீர்ப்பு (Referendum) நடாத்தவும் சிந்தித்தார். அதாவது தான் (ரணில்) மீண்டும் 5 வருடங்கள் ஜனாதிபதியாக பதவியில் இருப்பதை விரும்புகின்றீர்களா? என்பதாக அத்தேர்தல் அமையும். ஆமென 50 வீதத்திலும் அதிகமானவர்கள் வாக்களித்தால், தனது பதவியைத் தொடரலாம் என்று ரணில் கருதினார்.இத்தகைய மக்கள் தீர்ப்பை ரணிலின் மாமனாரான ஜெயவர்தனா 1982 இல் நாடாளுமன்றப் பதவி நீடிப்புக்காக செய்திருந்தார்.
இதன் மூலமாக ஏனைய வேட்பாளர்கள் போட்டியிடுவதைத் தடுத்து விட்டுத் தான் வென்று விடலாம் என்று ரணில் சிந்தித்தார்.
தற்போது அதனையும் விடுத்து, இரு வருடங்கள் தனது பதவிக்காலத்தையும் கூடவே நாடாளுமன்றப் பதவிக்காலத்தையும் நீடிப்பதற்கு விரும்புகின்றார். இவ்விடயங்கள் யாவும் மக்கள் ஜனநாயகத்தை (Democracy) விடவும் உயர்வாகச் சுயநலத் தனிநாயகமாகவே அமைகின்றது என்பதைக் காட்டுகின்றது.
ஏற்கனவே மாகாணசபைத் தேர்தல்,உள்ளூராட்சித் தேர்தல் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இவை மக்களுக்கான ஜனநாயகம் வீழ்ச்சியடைந்துள்ளதைக் காட்டுகின்றன.
அந்தவகையில், நம் நாட்டின் ஜனநாயகம் சிங்கள இனநாயகமாக மாறித் தற்போது சுயநலத் தனிநபர் நாயகமாக மாறியுள்ளது. இதுதான் இலங்கையின் எதிர்மறையான ஜனநாயகப் போக்காகவுள்ளது.
இதனால் நாடு சமூக, பொருளாதார,அரசியல், அறிவியல், பன்னாட்டியல் உறவு ரீதியாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் அரசியல் தலைவர்கள் இதனை உணர்ந்தபாடில்லை. திருந்தாத தலைவர்கள் நாட்டைத் திருத்தவே முடியாது என்றார்.