தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த கூட சர்வதேசம் தவறி விட்டது!

Share

வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல், கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை தமது வீடுகளிலோ, பகிரங்க தளங்களிலோ நடத்த தமிழ் மக்களுக்கு ஐநா அங்கீகரித்த உரிமை இருக்கிறது என்ற குறைந்த பட்ச விஷயத்தை கூட இலங்கை ஆட்சியாளர்களின் தலைகளில் திட்டவட்டமாக புகுத்த சர்வதேச சமூகம் இதுவரை தவறி உள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மனோ கணேசன் எம்பி இது தொடர்பில் மேலும் கூறி உள்ளதாவது;

அகோர யுத்தம் நிறைவு அடைந்து இன்று பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன. அன்று அகோர யுத்தத்திற்கு முழுமையான ஆதரவு ஒத்துழைப்புகளை அன்றைய இலங்கை அரசுக்கு வழங்கிய சர்வதேச சமூகம், தமிழர்களை பார்த்து யுத்தம் முடிந்த உடனேயே அரசியல் தீர்வையும், பொறுப்பு கூறலையும் பெற்று தருவதாக  தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் உறுதி கூறியது.

இலங்கை வந்து சென்ற அனைத்து ஐநா மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டில் பணியாற்றும் ராஜதந்திர பிரதிநிதிகள் அனைவரும், அன்றைய தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் என்ற முறையில் என்னை சந்தித்து, என்னிடம் இந்த உறுதிப்பாட்டை பலமுறை கூறி உள்ளனர்.

ஆனால், இன்று நிலைமை என்ன? அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் என்பன ஒருபுறம் இருக்க, யுத்தம் நிறைவு அடைந்து பதினைந்து வருடங்கள் ஆகி விட்ட இன்று, தமது உறவுகளை நினைந்து நினைவேந்தல்கள் நிகழ்த்தி கண்ணீர் விடும் குறைந்த பட்ச உரிமையை கூட சர்வதேச சமூகம் இலங்கை தமிழ் மக்களுக்கு பெற்று தர தவறி உள்ளது. இலங்கை பொலிசாரால் கைதுகள், கெடு பிடிகள் நடத்தப்படுகின்றன.

வருடா வருடம் மத தல யாத்திரை போவதை போல் தமிழ் மக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஜெனிவா போய் வருகிறார்கள். அங்கு தீர்மானங்கள் வருடா வருடம் நிறைவேறுகின்றன. ஆனால், இங்கே நாட்டுக்குள்ளே தீர்வுகள் இன்னமும் வரவில்லை.

ஆகவே சர்வதேச சமூகம் இலங்கை அரசியல் மனித உரிமை பிரச்சினைகளை சரியாக கையாளவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது. இலங்கை வந்து செல்லும் மற்றும் உள்நாட்டில் பணியாற்றும் ராஜதந்திர பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து வெறுமனே தலையாட்டி விட்டு வர எனக்கு முடியாது. எனது சமூக ஊடக தளங்கள் மூலம் நான், இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில்  கடமையை சரியாக செய்ய, சர்வதேசம் தவறி விட்டது என கூறி உள்ளேன்.

இதனால் பிரபல மேற்கு நாடு ஒன்றின் தூதுவர், மனம் வருந்துவதாக எனக்கு செய்தி அனுப்பி உள்ளார். அவர் எனது நண்பர். அவரது மன வருத்தம் தொடர்பில் நானும் வருந்துகிறேன்.

கொழும்பு மேற்கு நாட்டு ராஜதந்திரிகள் சந்திப்பிலும் இது பற்றி பேசப்பட்டதாக அறிகிறேன். எனது நிலைபாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. சர்வதேசம் இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில்  கடமையை சரியாக செய்யவில்லை என்ற என் நிலைபாடு சரியானது. சர்வதேச சமூக நண்பர்களிடம் எனக்கு தனிப்பட்ட கோபங்கள் கிடையாது. வரவும் கிடையாது. செலவும் கிடையாது.

நான் என்னை நம்பும் அப்பாவி மக்களுக்காக உண்மையை கூறுறேன். அவ்வளவுதான். இதன் பிறகாவது, இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில்  தம் நிலைபாடுகளை சர்வதேச சமூகம் மீளாய்வு செய்யுமானால், கொழும்பில் பணியாற்றும் ராஜதந்திர பிரதிநிதிகள் தங்கள் நாட்டு அரசுகளுக்கு இது பற்றி அறிவிப்பார்கள் ஆயின் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு