கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்களின் நிதி நடவடிக்கைகள் தொடர்பிலான தொடர் போராட்டமானது இன்று 9ஆம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்காக செயலாற்றுவதற்காக மாத்திரமே.
இருந்த போதிலும் அவர் தனது அதிகாரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் பிரயோகித்து வருவது சட்டவிரோதமானதும் சட்டமுறை அற்றதுமான செயற்பாடாகும்.
இந்த சட்டவிரோத நடவடிக்கையை மாவட்ட செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அனுமதித்து வருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிதி நடவடிக்கைகள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் கையாளப்படுகின்றது.
இந்நிலையில் கணக்காளர் பதவிக்கான ஆளணி அனுமதிக்கப்பட்டிருந்தும் அப்பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை இதுவரை மாவட்ட செயலகத்தினாலும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினாலும் மேற்கொள்ளப்படவில்லை என்று சட்டமுறை அற்ற செயற்பாடுகளை முன்வைத்து இன்றும் 9வது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் பாண்டிருப்பு பிரதேச மக்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடை பவனியாக வந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் வரை போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.