மருத்துவத்தில் போலி மருந்துகளைக் கலப்பதென்பது நோயாளிகளுக்கு விசம் கொடுத்தற்கு ஒப்பானது என மட்டக்களப்பு மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
போலி மருந்துகள் தொடர்பாக,முன்னாள் சுகாதார அமைச்சர்,சுகாதார அமைச்சு அதிகாரிகள் சிலர் தற்போது விளக்கமறியலுக்குள் இருக்கின்றனர். அதாவது இந்தியக் கடன் திட்டத்தின் கீழ்,போலி மருந்துகள் சில பெறப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, சந்தேகத்திற்கு இவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய் மருந்துகளாக இவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதாவது வெறுந்திரவம் மற்றும் போலி மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சின் மூலமாக வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இந்த விடயம் என்பது ஆபத்தானது அரக்கத்தனமானது. மருந்துகள் என்பது உயிர்களைக் காக்கும் ஒளடதமாகும். அதிலும் மோசடிகள் நடந்தால், நோயாளிகள் எங்கு செல்வது? அமைச்சர்கள் தனவந்தர்கள் சிகிச்சைகாக வெளிநாடுகள் செல்லலாம். சாதாரண மக்கள் எங்கு செல்வது? என்பதுதான் வலுவான கேள்வியாகவுள்ளது.
நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு ஊழல்,மோசடி, இலஞ்சம்,கொள்ளை,யுத்தம் என்பன காரணம் என்பதை அறிந்த பின்பும்,அவை தொடர்ந்த வண்ணம் உள்ளதுதான் உண்மை.
மருந்துகளிலும் போலிகள் கலப்பதென்பது நோயாளிகளின் உயிர்களைக் குடித்தாவது பணப்பையை நிரப்பும் கறுப்புச்சந்தை வியாபாரமாகவே அமையும்.
நாட்டின் மருத்துவத்துறையோடு விசமத்தனமாக அரசியல்வாதிகள் விளையாடுவது என்பது மிகவும் ஆபத்தான விடயமாகும்.
இப்படியான மோசடியான ஊழல்வாதிகளை மக்கள் வாக்களித்துத் தெரிவு செய்தால், மக்களின் உயிர்களுக்கும் உலைவைப்பார்கள் என்பதை இனியாவது மக்கள் உணர வேண்டும்.
கறுப்புச் சந்தையில் உழைத்த கறுப்புப் பணத்தைக் கொண்டு தேர்தலில் பணம், மதுபானம், வடிசாராயம், பார்சல்கள் கொடுத்து வாக்குகளை அபகரிப்பார்கள்.
பின்னர் மோசடிகள் மூலமாக உழைத்து செல்வந்தர்கள் ஆவார்கள்.
தற்போது வீதியமைப்புக்கான மோசடி இலஞ்சம் 5 வீதத்தில் இருந்து 10 வீதமாக அதிகரிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.
வரி கொடுக்கும் மக்கள்தான் வலிகளை சுமக்க வேண்டியுள்ளது. மோசடியாளர்கள் மாடா மாளிகைகளில் சொர்க்கத்தில் திழைக்கிறார்கள்.
வாக்களித்து ஏமாந்த மக்கள் நரகத்தில் வரி வலிகளை சுமந்து துடிக்கிறார்கள்.பசிவர மாளிகையில் மாத்திரை எடுக்கிறார்கள். பட்டினியால் மக்கள் தெருக்களில் பிச்சை எடுக்கிறார்கள்.
இதுதான் இலங்கையின் அரசியல் நலவரமாகும். குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு, உயர்பதவிகள் வழங்கி கௌரவிக்கப்படும் நாடாக எமது நாடு மாறியுள்ளது.
திருடர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதும் திருடப்பட்ட பணம் சொத்துகள் மீளப்பெறப்படாமல் இருப்பதுமே மக்களின் துயரத்திற்குக் காரணமாகவுள்ளது.சிறியவர்கள் சிறியளவு திருடினால்,அவன் திருடனாகின்றார்கள்.பெரியவர்கள் பாரியளவில் திருடினால், அவர்கள் தலைவர்களாகின்றார்கள் எனன்றார்.