கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக அடக்குமுறைககளை கண்டித்தும், நிர்வாக செயற்பாடுகளில் தொடரும் அத்துமீறிய தலையீடுகளுக்கு தீர்வு காணும் நோக்குடனும் அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் பல்வேறு கேள்விகளை முன்னிறுத்திய வகையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
திட்டமிடப்பட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிர்வாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்த நிலையில் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை வழச்கும் வரை எமது அமைதிப்போராட்டம் தொடரும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 17.107 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் 36346 சனத்தொகையினையும் 23217 வாக்காளர் எண்ணிக்கையும் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவனை, நற்பட்டிமுனை, சேனைக்கு குடியிருப்பு, மணற்சேனை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேச செயலகம் ஆகும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது உள்நாட்டளுவல்கள் அமைச்சினால் 1989 ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டு 33 வருடங்களுக்கு மேலாக தனது சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.