இந்து சமயத்தவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் நடப்பதனை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணன் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த (08) சிவராத்திரி தினத்தன்று நீதிமன்ற அனுமதியுடன் பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அவரால் இன்று (12.03.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலே தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மக்களின் பாதுகாவலர்களாக நிற்க வேண்டிய பொலிஸாரே மக்களையும் , அவர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் மிக கொடூரமாக நடந்து கொண்டது எமக்கு அதிர்ச்சியையும் , கோபத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.
இதே மாதிரியான செயற்பாடுகள் பரவலாக எமது வணக்க தலங்களில் இந்து சமயத்தவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் நடந்து வருவதனை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க மாட்டடோம்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வன்னிமாவட்ட புத்திஜீவிகள் ஏன் இதற்கான ஒரு எதிர்வினையை , நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.
மதங்களை , சட்டங்களை தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். வருடத்திற்கு ஒரு தரம் வரும் சிவராத்திரி தினத்தை மக்கள் நினைவுகோருவதையும், அதனை கொண்டாடுவதையும் தடுக்கும் முகமாக பரவலாக சிவதலங்களில் பொலிஸாரினால் ஏற்படுத்தப்பட்டு வந்த வன்முறைகளை மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு இதன் பின்னணியில் புத்த பிக்குகள் இருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது.
பொலிஸார் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கூட மதிப்பளிக்காது பௌத்த பிக்குகளின் உத்தரவுகளுக்கே பாதுகாப்புத் தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும்
தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத வன்முறையை தூண்ட முயற்சிப்பது போல் உள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.