வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 8பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து சிறையில் அடைத்த பின்னரே அதற்கான ஆதாரங்களை தேடி வருகின்றார்கள் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலையில் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை நிகழ்வுகளை தடுத்து நிறுத்திய பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
வெடுக்குநாறிமலை விவகாரத்தில் இலங்கை பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி தன்னிச்சையாக, மனிதாபிமானமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது எட்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அரை நிர்வாணத்துடன் தூக்கிச்செல்லப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
நீதிமன்ற கட்டளையின்றி நீதிமன்ற உத்தரவினையும் மீறி பொலிஸார் தன்னிச்சையாக பல உத்தரவுகளை வெளியிட்டு அடாவடியாக செயற்பட்டு வருகின்றனர்.
8பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த பின்னரே அவர்கள் தொடர்பில் பல ஆதாரங்களையும், கைது செய்யப்பட்டமைக்கான பதிவுகளையும் பொலிஸார் தேடி வருவதாகவும் வேலன் சுவாமிகள் தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.