ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்
“ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் சாந்தன் மீளவும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.
எனினும் இலங்கைக்கு அவரை மீள அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தாமதமாகியிருந்த நிலையில் மீளவும் வழக்குத் தொடுத்ததால் விடுதலை உறுதி செய்யப்பட்டு ஈழத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் திடீரெனச் சாந்தன் உயிரிழந்தார்.
இதனால் ஈழ தேசத்துக்கு உயிரோடு வருவதற்குக் காத்திருந்த சாந்தன் சடலமாகவே கொண்டு வரப்பட்டார். சாந்தன் என்னிடம் பேசுகின்றபோது தான் ஈழத்துக்குச் சென்றால் தனக்கு மக்கள் எப்படியெல்லாம் வரவேற்புக் கொடுப்பார்கள் என்று வந்து பாருங்கள் எனச் சொல்லியிருந்தார்.
ஆனால் உயிர் இல்லாமல் அவர் கொண்டு வரப்பட்டபோது வீதிகள் எங்கும் மக்கள் திரண்டு கண்ணீர்மல்க தமது அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.
அவர் இறந்தாலும் கூட அவர் கொண்ட கொள்கையையும் அவரையும் மக்கள் எந்தளவுக்கு நேசிக்கின்றார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது.
இந்த நாட்டுக்கு வரவேண்டும் என்றும் தனது தாயாரைப் பார்க்க வேண்டும் என்றும் சாந்தன் விரும்பினார். தனது தாயாரின் கையால் ஒருபிடி சோறு சாப்பிட வேண்டும் என்பதுதான் சாந்தனின் இறுதி ஆசையாக இருந்தது.
சாந்தனுடன் விடுவிக்கப்பட்ட மற்றைய மூவரும் இலங்கைக்கு வருவதற்கு அச்சப்பட்டு தாங்கள் விரும்புகின்ற நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளனர்.
உண்மையில் தற்போதுள்ள சிறப்பு முகாமில் அவர்களும் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டால் அவர்களுக்கும் பெரிய ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது.
ஆகையினால் அவர்களை அங்கிருந்து வெளியில் கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்குள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.
குறிப்பாக தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கும் அரசியல் கட்சிகளை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
அங்கு இந்த மூவர் மட்டுமல்லாது ஈழத்தைச் சேர்ந்த பலர் இருக்கின்றபோது இந்தச் சிறப்பு முகாமை பார்வையிட்டு இலங்கை – இந்திய அரசுகளுடன் பேச்சு நடத்த வேண்டும்.
அங்குள்ளவர்களின் விடுதலைக்கு உண்மையிலேயே முயற்சி எடுங்கள். இனியும் நீங்கள் அமைதியாக இருக்கக்கூடாது. உங்களால் இதனைச் செய்ய முடியும். அந்த முயற்சி திருவினையாக்கும்.
சிறையை விடக் கொடுமையானது அந்தச் சிறப்பு முகாம். அந்தச் சிறப்பு முகாம் மரண கொட்டகை போல்தான் உள்ளது. எனவே அங்குள்ள மூவரையும் காப்பாற்ற நீங்கள் அங்கு வாருங்கள் பேசுங்கள்.
அவர்களது விடுதலைக்காக இங்குள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்கள், இந்தியாவிலுள்ள தமிழ்த் தேசிய உணர்ஙாளர்கள் என அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம் போராடுவோம்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றவர்களை வெளியில் விடுவதற்கான முயற்சிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
இந்திய மத்திய அரசு மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. அரசுகூட அக்கறை கொண்டிருக்கவில்லை.
குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியிலுள்ள தி.மு.க. என்றைக்குமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது என்று சொல்லமுடியாது .ஈழத்தில் போர் உச்சக் கட்டத்தின்போது போராட்டத்தை நசுக்குவதற்காக தி.மு.கவினரே போராட்டங்களை நடத்தினார்கள். தி.மு.க. நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிறுத்தி இருக்கலாம்.
குறிப்பாக தமிழகத்துக்குப் பிரதமர் வருகின்றார் என்றால் சிறப்பு முகம் மட்டுமல்ல ஏனைய முகாம்களில் இருந்தும் இலங்கைத் தமிழர் வெளியே வர முடியாது. அதிலும் கையெழுத்துப் போட வேண்டும் இல்லாவிட்டால் பழிவாங்கல் நடவடிக்கை நடக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தி.மு.க. , அ.தி.மு.க. என பிரதான இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் அது தமிழர்களுடைய ஆட்சி அல்ல.
எனவே நடந்தவை இருக்க இனிமேல் அப்படி நடக்காமல் இருக்கவே பார்க்க வேண்டும். அங்குள்ள சிறப்பு முகாம் எந்தளவுக்கு ஆபத்தானதோ அதேபோல்தான் அங்குள்ள அகதி முகாம்களும் ஆட்டு, மாட்டு கொட்டில்களைவிட மிக மோசமாக இருக்கும்.
இதேவேளை இந்திய மத்திய அரசோ,தமிழக அரசோ நினைத்திருந்தால் சாந்தனின் இறுதி ஆசையை நிறைவேற்றி இருக்கலாம்.
ஆனால் அது நடைபெறாமல் போனதற்கும் சாந்தனின் உயிரிழப்புக்கும் தி.மு.க. அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது. இதற்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்தும் ஆராய்கின்றோம்.
மேலும் ராஜீவ் காந்தி விவகாரத்தை வைத்து சாந்தன் உள்ளிட்டவர்களை இந்திய அரசு பழிவாங்கியும் இருக்கலாம்.
பழி தீர்த்தும் இருக்கலாம். இந்தியாவில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைத் தவிர ஏனைய பலரிடமும் பழிதீர்க்க வேண்டுமென்ற எண்ணமே இருந்தது.
குறிப்பாக ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுகின்றது. அதாவது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என வெளியில் காட்டிக் கொண்டாலும் உண்மையிலையே ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இனியும் ஆதரவாக இருக்காது.
புலிகள் என்ற பெயரில் இலங்கை – இந்தியத் தமிழர்களை ஒடுக்குவதைத்தான் இந்திய அரசு தொடர்ந்தும் செய்துவருகின்றது.
ஈழத் தமிழர்களுக்காக இந்தியா ஒருபோதும் நிற்காது என்பதுடன் உதவி செய்யவும் மாட்டாது. எனவே இந்தத் தமிழ் இனத்தையும் மக்களையும் மண்ணையும் காப்பதற்கு அனைவருமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டும். – என்றார்.