ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு தமிழகத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது யாழ் மருதடி வீதியிலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நாளையதினம் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்திய -திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனிற்கு நீதி கோரியும், “இந்தியத் துரோகத்தை வேரறுக்க தமிழர்களாய் ஒன்றிணைவோம்” எனும் தொனியில் யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை உயிரிழந்த சாந்தனின் உடல் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலை உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானோர் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
விமான நிலையத்தின் விதிமுறைகள் பூர்த்தியான பின்னர் நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேரடியாக யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது தயாரின் இல்லத்திற்கு சாந்தனின் உடல் கொண்டு செல்லப்படவுள்ளது.
அங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் சாந்தனின் உடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.