2017ம் ஆண்டு, எமது ஆட்சியின் போது மலையகத்துக்கு எமது அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெருந்தோட்டங்களில் கட்டப்படும் இந்திய வீடமைப்பு திட்ட வீடுகளின் தொகையை மேலும் 10,000 த்தால் அதிகரிப்பதாக அறிவித்தார். எமது ஆட்சி 2019ல் முடிவுக்கு வந்ததால், எம்மால் அதை தொடர முடியவில்லை. இன்று அந்த வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை அறிந்து, அதை வாழ்த்தி வரவேற்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
பெருந்தோட்டங்களில் கட்டப்படும் வீடமைப்பு திட்ட வீடுகளின் காணி விஸ்தீரணம், எமது ஆட்சியில் 7 பேர்ச் என அமைச்சரவை பத்திரம் மூலம் உறுதி செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற, இந்த அரசாங்கம் 20 பேர்ச்சில் பெருந்தோட்டங்களில் வீடு கட்டி தருவதாக கூறியது. பின்னர் கடந்த வரவு செலவு திட்டத்தின் போது 10 பேர்சில் பெருந்தோட்டங்களில் வீடமைப்பு என்று கூறியது.
ஆகவே, இன்று ஆரம்பிக்கப்படும் இந்திய வீடமைப்பு திட்ட வீட்டு காணிகளின் விஸ்தீரணம் பற்றிய ஒரு தெளிவின்மை மக்கள் மத்தியில் இருக்கின்றது. இன்று ஆரம்பிக்கப்படும் திட்டத்தில் கட்டப்படும் வீட்டு காணி விஸ்தீரணம், ஏழு பேர்ச்சா, பத்து பேர்ச்சா, இருபது பேர்ச்சா என்ற விபரத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
காணி விஸ்தீரணம் அதிகரிக்கப்பட்டிருக்குமானால், அவை இந்த அரசினால் 10 பேர்ச் அல்லது 20 பேர்ச் என்ற அளவுகளுக்கு அமைச்சரவை பத்திரம் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.
காணி விஸ்தீரணம் அதிகரிக்கப்பட்டிருந்தால் நாம் பெருமகிழ்ச்சி அடைவோம். எப்படியும், 2017ம் ஆண்டு, எமது ஆட்சியின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 10,000 இந்திய வீடமைப்பு திட்டம், இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை அறிந்து, அதை இதயபூர்வமாக வாழ்த்தி வரவேற்கின்றோம் என்றார்.