இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமாக 1987 இல் 13வது அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அத்திருத்தம் முறையாக முழுமையாக இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் அத்திருத்தம் படிப்படியாகப் பேரினவாதிகளின் முன்னெடுப்புகளால் அரிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றது என மட்டக்களப்பு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஶ்ரீநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய நிலையில் 13வது அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் கருத்து கூறுமரபோதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
தற்போது பிழித்துரு ஹெல உருமயக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதயகம்மன்பில்ல இதுவரை நடைமுறைக்கே வராத மாகாணசபையின் பொலிஸ் அதிகாரங்களை அகற்றுவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இவர் பேரினவாத அடிப்படை வாதிகளில் ஒருவராவார். இப்படியான பிரேரண கொண்டு வரப்பட்டால், சிங்களப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவான ஆதரவை அளிப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை.
இனப்பிரச்சினைக்கான தீர்வு சுயாட்சி அடிப்படையிலான சுயநிருணய உரிமையை வழங்கவல்ல சமஷ்டியாட்சி முறையே என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூறி வருகின்றன.ஆனால், இருக்கின்ற 13வது திருத்தத்தை அழித்து மாகாணசபை முறையை நீக்கும் அடிப்படைவாத வஞ்சகப் பொறிமுறை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஏற்கனவே வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தற்காலிக இணைப்பினை ஜே.வி.பியினர் நீதிமன்றத் தீர்ப்பு மூலமாக அகற்றியுள்ளனர். மாகாண சபைத் தேர்தல் 2018 இல் இருந்து 6 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது. மேலும், காணியதிகாரங்கள் இருந்தும் மாகாணசபைகளுக்கு அவை வழங்கப்படவில்லை. அத்தோடு மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுனர் மாகாணசபை அதிகாரங்களை ஏகபோகமாகக் கையாண்டு வருகின்றார்.
அரைகுறைத் தீர்வான மாகாணசபையையே பேரினவாதம் இல்லாமல் செய்ய முற்படும்போது சமஷ்டி முறையான தீர்வினை அடிப்படைவாத ஆட்சியாளர்கள் ஒரு போதும் வழங்க மாட்டார்கள் என்பது தெளிவாகின்றது.
மாகாண சபை முறையையும் கைவிட்டு உள்ளூராட்சி சபை, மாவட்ட சபை மட்டங்களில் அதிகாரங்களை அளித்து தமிழர்களின் சுதந்திரத்தை, சிங்கள பெளத்த மேலாதிக்க ஒற்றையாட்சி உருக்குத்தூணில் கட்டிப் போடவே பேரினவாதம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சலுகைவாத பிழைப்பு வாதத் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பதவிகளுக்காகப் பணத்திற்காக பேரினவாதிகளின் அடிவருடிகளாக இருப்பதை இலாபமாகக் கருதி வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கட்சிகள், புலம்பெயர் தமிழ் சமூகம்,இந்தியா உட்படச் சர்வதேச சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவே தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வு சாத்தியமாகும். இவ்வாறு நிலைமை இருக்க,தமிழ்த்தேசியக் கட்சிகளுக்குள் கலப்படமான சக்திகளும் பேரினவாதத்திற்குத் துணை போவது போல் கட்சிகளைச் சிதைக்க நினைக்கின்றன எனவும் தெரிவித்தார்.