நூறாவது நாளை எட்டிய மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம்!

Share

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைக்காணியை மீட்டுத்தருமாறு கோரி போராட்டம் நடாத்திவரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் நூறாவது நாளான இன்று(23) மாபெரும் ஆர்ப்பாட்ட போராட்டமாக நடைபெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு சித்தாண்டியில் உள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற் முன்பாக தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை அபகரிப்பு எதிராக கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் நூறாவது நாளான இன்று சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து வழிபாடுகளை முன்னெடுத்த கால்நடை பண்ணையாளர்கள் ஊர்வலமாக வந்து தாம் போராட்டம் முன்னெடுத்துவரும் பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பகுதியில் பெருமளவான பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டி ருந்தபோதும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை ஜெகதாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது போராட்டம் நடைபெற்று நூறாவது நாளை குறிக்கும் வகையில் 100 என்ற தீப்பந்தம் செய்யப்பட்டு அதில் எரித்து தமது போராட்டத்தினை கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்தனர்.

அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியான வலியுறுத்தல்களை முன்னெடுத்துவரும் நிலையில் நூறு நாட்களை தாண்டியும் அதற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பதுடன் அதிகாரிகள் மட்டத்தில் இதுவரையில் தமது போராட்டம் தொடர்பில் எந்த அதிகாரிகளும் வந்து தமக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க முன்வரவில்லையெனவும் இதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றியதற்காக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்யும் பொலிஸார் தமது மாடுகளை சுடுபவர்களை இதுவரையில் கைதுசெய்யமால் இருப்பது என்பது தமிழர்களுக்கு பொலிஸ் அதிகாரத்தின் மீது நம்பிக்கையிழக்க செய்துள்ளதாகவும் இதன்பேது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் 100வது நாள் போராட்டத்தினை குறிக்கும் வகையில் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு