உலகத்தமிழர் பேரவைக்கும் சிறந்த இலங்கைக்கான சங்கம் எனப்படும் பிக்குமார்களைக் கொண்ட அமைப்புக்கும் இடையில் இரகசியமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிரகடனமொன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், பொறுப்புக்கூறுதல் , அதிகாரப்பரவலாக்கம் செய்தல் தொடர்பாக இந்தப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னால நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன் தெரிவித்தார்.
இப்பிரகடனம் தொடர்பாக சிந்திக்கத்தக்க தமிழ் மக்கள் மத்தியில் பல கேள்விகள், சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்
கடும் போக்குடைய, அடிப்படை வாதமுடைய பிக்குமார்களுக்கும், யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு சார்பாக செயற்படுவதாகக் கூறுகின்ற உலகத்தமிழர் பேரவைக்கும் இடையில் எப்படி இணக்கம் ஏற்பட்டது? அந்த இணக்கத்தின் படி ஏற்பட்ட ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?
யுத்தத்தால் பாரிய இழப்புகளுக்குள்ளான தமிழர்களுக்கு பொறுப்புக் கூறல் என்பது உருப்படியாக இருக்குமா? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்குமா? 13ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தையே மறுக்கின்ற பிக்குகள் ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்று தமிழர்களுக்கு தீர்வு வழங்குவார்களா? உலகத் தமிழர் பேரவையில் இடம் பெற்றிருந்த 14 புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் இமாலயப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டார்களா? என்றெல்லாம் பல வினாக்கள் எழுகின்றன.
இதற்கான் பதில்கள் எதுவும் சாதகமாக இல்லை. தமிழர்களுக்குப் பாதகமாகவே உள்ளன. பொறுப்புக்கூறல், இனவழிப்பு,சர்வதேச விசாரணை, சுயநிர்ணய உரிமை, தமிழர் தாயகம் என்கின்ற தமிழர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளைக் கடப்பதற்கான பேரின அடிப்படை வாதப் பொறிமுறையாகவே இமாலயப் பிரகடனம் அமைந்துள்ளது என்பதே தமிழர்களின் ஊகிப்பாக உள்ளது.
கடந்த கால 75 ஆண்டு காலப் படிப்பினையில் இருந்து தமிழர்கள் இந்த நிலைப்பாட்டில் உள்ளனர்.வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் இமாலயப் பிரகடனம் அமையப்போகின்றதோ எனத் தமிழர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.அதற்கிடையில்,இதனை நியாயப்படுத்தவும் சிலர் அது ந்துகின்றனர். ஒற்றையாட்சியைக் கடந்த அதிகாரப்பகிர்வு உள்ளதாகவும் கூவ ஆரம்பிக்கின்றனர்.
மேலும் நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை இமாலயப் பிரகடனம் ஏற்படுத்தும் என்றும் கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் பல தடவைகள் பேரினவாத அதிகார மையத்தால் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் எதிலும் ஐயம் கொள்வதில் நியாயங்கள் உண்டு.