மீண்டும் யுத்தம் ஆரம்பித்தால் தமிழர்களை வெளிநாடு களுக்குச் செல்லாமல் தடுத்து,யுத்தம் நடைபெறும் இடங்களுக்கு அனுப்புவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அதாவது மிஞ்சியுள்ள தமிழர்களையும் தப்பிச் செல்ல விடாமல் இனவழிப்பு யுத்தம் மூலமாக அழிக்க வேண்டும் என்று வீரசேகர நினைக்கிறார் என்ற அர்த்தம் வெளிப்படுகிறது என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்
கடந்த 2009 முள்ளி வாய்க்கால் இறுதியுத்தத்தில் 146,000 தமிழர்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளதாக முன்னாள் மன்னார் ஆண்டகை இராயப்பு யோசப் அவர்கள் சர்வதேசத்திற்கு சாட்சியம் கூறியுள்ளார்.
இவற்றைச் சனல் – 4 தொலைக்காட்சி ஆவணமாக்கி சர்வதேசரீதியாக காட்சிப்படுத்தியுள்ளது. பிள்ளையானின் முன்னாள்செயலாளரும், ஆலோசகருமான அஸாத் மௌலானாவும் இதற்கு ஆதாரமாகப் பல சாட்சியங்களை கருத்தேற்றம் செய்துள்ளார்.
முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப்புதைகுழியானது, இனவழிப்பை மேலும் உறுதிப்படுத்தி வருகின்றது. இதைப்போல் பல மனிதப் புதை குழிகள் வடக்கு கிழக்கில் உள்ளன.
இப்படியெல்லாம் செய்த வினைகளுக்கே நீதி,இழப்பீடுகள், பரிகாரங்களை வழங்காத அடிப்படைவாத ஆட்சியாளர்கள்,தமது கொக்கரிப்புகள் கூச்சல்களில் இருந்து இன்னும் விடுபடவில்லை.
அதில் ஒரு அநாகரிக இனவாதக் கொக்கரிப்பாகவே வீரசேகரவின் கொக்கரிப்பு நோக்கப்படுகின்றது. அதாவது மீண்டும் யுத்தம் ஆரம்பித்தால், தமிழர்கள் உயிர் தப்புவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதைப் பலாத்காரமாகத் தடுத்து, யுத்தகளத்துக்குக் கொண்டு சென்று அவர்களையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று வீரசேகர கருதுகின்றாரா? என்ற நியாயமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வீரசேகரவின் வார்த்தைகள் செயற்பாடுகள் மீண்டும் இந்நாட்டில் இனவன்மங்களைத் தூண்டுவதாகவே அமைகின்றது.
மோசமான பயங்கரவாதச் சட்டத்தை மீண்டும் மீண்டும் தமிழர்கள் மீது பாய்ச்சுவதையே சிங்கள இனவாதிகள் நோக்காகக் கொண்டுள்ளார்கள்.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இனியும் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம் என்று சர்வதேசத்திடம் கூறிக் கடன்கள் பெற்ற ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள், தற்போது தமிழர்கள் மீது மீண்டும் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளனர்.
உயிர் நீத்தவர்களை நினைவேந்துதல் தொடர்பான விடயத்தில் கடந்தவாண்டு கடைப்பிடித்த நெகிழ்வான போக்கினை இவ்வாண்டு இனவாத ஆட்சியாளர்க இறுக்கியுள்ளார்கள்.
பயங்கரவாகதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் கைது செய்யப்பட்டும்,கைது செய்யப்படவும் உள்ளதாக அறியமுடிகின்றது.புலிகளை நினைவுபடுத்தியவர்கள் என்ற வகையில் தமிழர்களைக் கைது செய்வதற்கு ஜனாதிபதியும் உத்தரவிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை மையமாகக் கொண்டு ஜனாதிபதி ரணிலின் உத்தரவும் இனவாதிகளான வீரசேகர,கம்மன்பில,வீரவன்ச போன்றவர்களைத் திருப்திப்படுத்துவதாக அமைத்துள்ளது.
எழுபத்தைந்து ஆண்டுகளாக இனவாத மதவாத கொக்கரிப்புகள்,வன்மங்களால் நாட்டை அழித்து தனிப்பட்ட சுகபோகங்களை அனுபவித்த இனவாதிகள், அப்பாதையினைக் கைவிடவும் மாட்டார்கள்,நாட்டைக் கட்டி எழுப்பவும் விடமாட்டார்கள் என்பதே உண்மை.
https://youtu.be/2uPKNiA8rmU