அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்காலத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சை தரம் 10 இலும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தரம் 12 இலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகாண ரீதியில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள 280 பில்லியன் ரூபா நிதியுடன் மொத்தமாக 517 பில்லியன் ரூபா இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அவர்களையும் சாதாரண பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பறைகளில் இணைத்துக்கொள்ளக் கூடிய வகையில் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம் எனவும் கூறினார்.