முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியிலும் பொலிசாரின் கெடுபிடிகளுக்குள்ளும் இன்று (02) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினாலும், சிங்கள காடையர்களாலும் ,அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்திற்கு வரவழைத்துவிட்டு அவர்களது ஆடைகளை களைந்து அவற்றினால் அவர்களை கட்டி 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேர் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாகவே உறவினர்கள் கருதுகின்றனர்.
குறித்த ஒதியமலைப் படுகொலையின் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (02) ஒதியமலை சனசமூகநிலைய வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் பொலிசாரின் கெடுபிடிகளுக்குள்ளும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்களால் அவர்களுக்கான நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தி நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து வழமை போல் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசையும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பட்டாளர்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வு வளாகத்திலும் ஆலய சூழலிலும் பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் புகைப்படங்கள் எடுத்து மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/t079Wh-hCXs