மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக் கைதியொருவர் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் துரைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் போது அவரது உடலில் காயங்கள் உள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.