ஶ்ரீலங்கா பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இளைஞனின் உயிரிழப்பு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்திருந்தது.
இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவரான நாகராஜா அலெக்ஸ் என்பவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.