முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (22.11.2023) காலை 11.30 மணியளவில் மாவீரர் பணிக்குழு தமிழ்த்தேசிய சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த மாவீரரின் தந்தையான சவுந்தரம் மற்றும் முன்னாள் போராளி கர்த்தகன் ஆகியோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான உலருணுவு பொருட்களும், தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.