மட்டக்களப்பின் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அட்டகாசத்தால் மட்டக்களப்பு மக்கள் அதிருப்தியும், அருவருப்பும் அடைந்துள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
இவர் ஒரு மதகுரு தானா? என்று கேட்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். புத்த பகவானின் போதனையை இவர் அசிங்கப்படுத்தும் விதத்தில் வெறித்தனமாகப் பேசி வருகின்றார். அண்மையில் மட்டக்களப்பு இருதயபுரத்திற்குச் சென்ற இவர் தமிழர்களை துண்டு தூண்டாக வெட்டுவேன் என்று இனவெறியுடன் பேசியுள்ளார்.
மயானம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, அதற்கான சட்டப்படியான நடவடிக்கையை எடுப்பதை விடுத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. வாய்க்கு வந்த படியெல்லாம் திட்டுகின்றார்.
பல்லின மக்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தைக் குழப்பும் ஒருவராக உள்ளார். ஏற்கனவே மயிலத்தமடு, மாதவனையில் புத்தர் சிலையை வைத்துப் பண்ணையாளர்களை மிரட்டினார்.
பொலிசார் கூட சட்டப்படியாக இவர் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. அரசியல் தேவைக்காக இவரை யாரோ பயன்படுத்தி இன வன்மங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் இலாபம் அடைய முயல்கின்றார்களோ என்று சந்தேகம் ஏற்படுகின்றது.
சட்டத்தின் முன் யாவரும் சமம் என்றால், இவர் மீது ஏன் சட்டம் பாய்வதில்லை என மக்கள் கேட்கின்றார்கள். இன, மதப்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் இவர் பெளத்த தருமத்திற்கே இழிவை ஏற்படுத்துபவராக உள்ளார். பௌத்த மதபீடங்கள் கூட இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
முரண்பாடுகளை உருவாக்கி முற்ற வைத்தமையால், நாட்டின் பொருளாதாரம் அதல பாதாழத்தில் வீழ்ந்துள்ளது. இன்னும் இப்படியான கேடான செயல்கள் தேவைதானா? என்று கேட்கத் தோன்றுகின்றது. இராஜாங்க அமைச்சர் மயிலத்தமடுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சாதுக்களுடன் சமரசம் பேசி வருவதாகப் பண்ணையாளர்களிடம் பேசினார். ஆனால் இதுநாள் வரையும் பேசிமுடித்ததாகத் தெரியவில்லை என்றார்.
https://youtu.be/yyo4UC6BGH4?si=8FY6CE1XVxnn2h_d