“காசா மீதான இனப்படுகொலையை எதிர்ப்போம்” ஒடுக்கப்படும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் பலஸ்தீன மக்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பினால் பலஸ்தீன மக்கள் மேற்கு கரையிலும் காஸாவிலும் சுருக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் அரசாங்கத்தினதும் அதன் மேற்குலக கூட்டாளி நாடுகளினதும் அரசியல் பொருளாதார நலன்களுக்காக காஸா மக்கள் பலியாக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய மக்களுக்கு எதிரான கொடூர தாக்குதலைக் கண்டிக்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதன்போது பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புகள், சிவில் சமூகத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.