தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும்,அவர்களுக்கு நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடன், இன்று வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு முழுவதும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவும் சட்டவாட்சியை பாதுகாப்பதற்காகவும் மனித உரிமையை பாதுகாப்பதற்காகவும் தமிழ் பேசும் மக்கள்ஒற்றுமையாக இணைந்து வடக்கும் மற்றும் கிழக்கில் நடைபெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்து அழைப்பு விடுத்துள்ளன.
இது குறித்து அந்தக் கட்சிகள் தெரிவிக்கையில்.
நீதிக்காக துணிந்து நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு நேர்ந்திருக்கும் கதி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உண்மை மழுப்பப்பட்டு, மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீதிபதி மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது இந்த நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்பதை காட்டுகின்றது.உயிரச்சுறுத்தல் காரணமாக நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
அத்துடன் எமது மக்களின் காணிகள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்தும், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை முன் வைத்தும் எமது தாயகமான வட- கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்கு நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்.
கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தர முன்வந்துள்ளன. இந்நிலையில், எம் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் உட்பட மாணவர் அமைப்புக்கள், மகளிர் உரிமை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் கழகங்கள், சிவில் சமூக சங்கங்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் உட்பட, பல்துறை சார்ந்த செயற்பாட்டு அமைப்புக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த மக்கள் போராட்டத்தில் நாம் நாடி நிற்கின்றோம் .என இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ,தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழ் மக்கள் கூட்டணி , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி ஜனநாயகப் போராளிகள் கட்சி , ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.