முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை விவகாரம் ஜனாதிபதி வரை பேசப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று (17.10.2023) குறித்த பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் களவிஜயம் மேற்கொண்டு குறித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளார்கள்.
புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள உயர் அதிகாரிகள், வனவள திணைக்கள உயர் அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள், காணி தொடர்பிலான திணைக்கள உயர் அதிகாரிகள், கமநலசேவை திணைக்கள உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பயணம் மேற்கொண்டு கள ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.
கடந்த மாதம் இறுதியில் குருந்தி ராஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன முன்மொழிந்துள்ளார்.
பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் மற்றும் பொது வசதிகளுக்காகவும் அமைப்பதற்கும் இந்த காணியை ஒதுக்குமாறு, இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முன்மொழிந்திருந்தார்.
இதன் பின்னர் இன்று (17.10.2023) களவிஜயம் மேற்கொண்டு குருந்தூர் மலையினை பார்வையிட்டுள்ளதுடன் குருந்தூர்குளம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளனர்.
குருந்தூர் மலைக்காக தொல்பொருள் திணைக்களம் தமிழ்மக்களின் பூர்வீக காணிகளை எல்லைப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் பல்வேறு தடவைகள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
மலையினை அண்டிய தமிழ்மக்களின் பூர்வீக காணிகளில் எதுவும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் தொல்பொருள் திணைக்களமும், வனவளத்திணைக்களமும் தங்கள் காணிகளை எல்லைப்படுத்தியுள்ள நிலையில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குறிப்பாக 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் விவசாய செய்கையினையோ, மீள்குடியேற்றத்தினையோ செய்யமுடியாத நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.