எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கும் மற்றும் கிழக்கில் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் ”என தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று(17) மட்டு. ஊடக அமையத்தில் நடத்திய கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது” மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வினை காணும் வகையில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தினை ஒரு வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது நடைமுறைப்படுத்தாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவிலான நிர்வாக முடக்கத்தினை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலையேற்படும்.
அதுமட்டுமல்லாது நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது இந்த நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்பதை காட்டுகின்றது.
இதனை கண்டிக்கும் வகையிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் சமூகம் அனைத்தும் இணைந்து 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கவேண்டும்.
ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவும் சட்டவாட்சியை பாதுகாப்பதற்காகவும் மனிதஉரிமையை பாதுகாப்பதற்காகவும் இந்த ஹர்த்தாலை நடாத்துவதற்காக தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்ற அனைத்துகட்சிகளும் ஒற்றுமையான இணைந்து இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்.
இந்த ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம், அரச திணைக்களங்கள், போக்குவரத்துறையினர், பொதுமக்கள் என அனைவரையும் இதற்கு ஆதரவு வழங்குமாறு கோரிநிற்கின்றோம்.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ, தமிழீழ விடுதலைக்கழகம் புளோட், ஜனநாயக போராளிகள் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.