வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்பட்ட வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி இன்றையதினம் (08) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
அழிவு நிலையில் உள்ள தமிழர்களது பாராம்பரிய விளையாட்டாக கிளித்தட்டு இருப்பதனால் அதனை கிராம மட்டங்களில் இருந்து மீளுருவாக்கும் நோக்கோடு முதற்கட்டமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள அணிகளை உள்வாங்கி குறித்த கிளித்தட்டு போட்டி நடத்தப்பட்டிருந்தது.
இறுதிப்போட்டியில் இந்துபுரம் பி அணியும், வித்யாபுரம் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டிருந்தன. அதில் வித்யாபுரம் அணி 5 பழங்களும், இந்துபுரம் பி அணி 10 பழங்களும் பெற்று இந்துபுரம் பி அணி வெற்றிவாகை சூடியிருந்தது.
வெற்றியீட்டிய இந்துபுரம் பி அணி முதலாம் பரிசாக ஒரு லட்சம் ரூபா பணம்பரிசையும், வெற்றிக்கிண்ணத்தையும் தட்டி சென்றது. இரண்டாம் இடத்தை பிடித்த வித்யாபுரம் அணிக்கு 50 ஆயிரம் ருபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும், மூன்றாம் இடத்தை பிடித்த அணிக்கு 25 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகனுக்கான வெற்றி கிண்ணமும், தொடர் ஆட்ட நாயகனுக்கான வெற்றிக்கிண்ணமும் கலந்து கொண்ட பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு வெற்றியீட்டிய வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.