தமிழர்களின் விடுதலைக்காகவென ஆரம்பிக்கப்பட்ட ஆயுத போராட்டம் முப்பது வருடங்களின் பின் மௌனிக்கப்பட்டபோதும், தமிழர்களின் விடுதலைக்கான பயணம் நினைவேந்தல்களின் மூலமும், ஜனநாயகவழி ஆர்பாட்டங்கள் மூலமும் தொடர்கிறது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் “போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் மாறாது” என்ற தியாகி திலீபனின் கூற்று மெய்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபனின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு – சுதந்திரபுரம் சந்தி வளாகத்தில் இடம்பெற்ற நிலையில், அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில் அகிம்சை என்றால், அது மகாத்மா காந்தி என இந்தியா மார்தட்டிக்கொண்டிருந்தது.இந் நிலையில் அதே இந்தியாவின் அடக்கு முறைகளைப் பொறுத்துக்கொண்டு, இந்தியா ஏதாவது தீர்வுகளைப் பெற்றுத்தரும் என்ற எண்ணத்துடன், தியாகதீபம் திலீபன் எமக்காக, தலைவரின் சிந்தனைக்கேற்ப ஓர் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்து தன்னுயிரைத் தியாகம் செய்தார்.
இவ்வாறான சூழலில் நாம் தியாகதீபத்தினுடைய 36ஆவது ஆண்டு நினைவேந்தலை மேற்கொண்டு வருகின்றோம். இந்த நினைவேந்தல்களினூடாக தியாகதீபம் திலீபன் யார் என்பதை, நாம் எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பதும், தியாக தீபத்தின் அகிம்சை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதுமே எமது நோக்கமாகும்.
எமது அடுத்த தலைமுறையினர் பலரும் தாமாக முன்வந்து தியாக தீபம் திலீபனை நினைவேந்துவதையும், அவருக்கான அஞ்சலிகளைச் செலுத்துவதையும் காணும்போது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.
தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருக்கும்போது, பேசமுடியாத நிலையில் அவரால் சில வசனங்கள் எழுதப்பட்டன.
“நான் மரணத்தை மகிழ்ச்சியுடனும், பூரண திருப்தியுடனும்தான் தழுவிக்கொள்கின்றேன். என் தலைவனின் தலைமையில் அனைத்து மக்களும் கிளர்ந்தெழுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.இந்த மாபெரும் மக்கள் புரட்சி என்றோ ஓர்நாள் எம் இலட்சியத்தினை நிறைவேற்றியே தீரும். எம் மக்கள் மீது கொண்ட அசையாத நம்பிக்கையின்பேரில், அவர்கள் மீதுகொண்ட தழராத பாசத்தின்பேரில், அவர்களின் விடிவிற்காக நான் 651ஆவது விடுதலைப்புலியாக என் தோழர்களை நோக்கி மெதுவாகப் போய்க்கொண்டிருக்கின்றேன்.” என எழுதினார்.
இவ்வாறாக எமக்கான விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் கோரிக்கைகளை முன்வைத்து, நீர், உணவு ஏதுமின்றி நாளாந்தம் தனது உடலினை உருக்கி எமக்காக உயிர்நீத்தார்.
இ்வ்வாறு அகிம்சை வழிப்போராட்டத்தினை முன்னெடுத்ததன் ஊடாக இங்கு தமிழர்களாகிய நாம் விடுதலைக்காக அறவழியில் போராடி வருகின்றோம் என்பதை உலகறியச் செய்தார்.
குறிப்பாக கடந்த காலத்தில் தமிழர்களுக்கான தீர்வு விடயத்திலே இலங்கை அரசு பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம் என ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழர்களை ஏமாற்றிவந்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கை – இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதிலும் தமிழர்களாகிய நாம் ஏமாற்றப்பட்ட நிலையிலேயே இருக்கின்றோம்.
“போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் மாறாது” எனத் திலீபன் அன்று சொல்லியதற்கு இன்றும் தமிழ் மக்கள் வடிவம் கொடுத்துவருகின்றார்கள்.
தமிழர்களுக்கான விடுதலைப் பயணத்தில் முப்பது வருடகால யுத்தம் மௌனிக்கப்பட்டு, நாம் வீழ்ந்து விட்டதாக அனைவரும் நினைக்கும்போது, மீண்டும் இவ்வாறான நினைவேந்தல்கள் மூலமும், போராட்டங்கள் மூலமும் தமிழர்கள் தமது விடுதலைக்கான எழுச்சியைத் தொடர்ந்தும் காண்பித்து வருகிறார்கள் – என்றார்.