திருமலை மாவட்டத்தில் சிங்கள-தமிழ் இனமோதலை உருவாக்க அரசு திட்டமிட்டு செயற்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம்,தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கிறார்கள்.இந்நிலையில் அண்மைக் காலமாக திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள-தமிழ் இனவாத முரண்பாடுகள் அதிகம் இடம்பெறுகின்றது.இதன் ஒரு கட்டமாகவே கஜேந்திரன் எம்.பி. யும் திருகோணமலையில் வைத்து சிங்களவர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.
இனவாத மோதல்களுக்கு மூவின மக்களும் வாழும் திருமலை மாவட்டம் பொருத்தமானதாக இருப்பதனால் திருமலை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.