முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் நேற்றைய நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவனிடம் வினவியபோது, அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் புதனன்று (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிலையில் நான்காம்நாள் அகழ்வாய்வுகள் நேற்று (09) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த அகழ்வாய்வுகள் தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி, தடயவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றபோது, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், அகழ்வுப்பணி இடம்பெறும்போது ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கக்கூடாது என கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதிய உணவருந்துவதற்காக அகழ்வாய்வுகள் இடைநிறுத்தப்பட்டபோது ஊடகவியலாளர்கள் மனிதப் புதைகுழியை புகைப்படம் எடுக்கவும், காணொளி எடுக்கவும் அனுமதியளிக்கப்பட்டது.
அத்தோடு குறித்த அகழ்வுப்பணிகளில் விடுதலைப்புலி அமைப்பு உறுப்பினர்கள் பயன்படுத்தும் த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில் நான்காம்நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவனிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு குறித்த நான்காம் நாள் அகழ்வாய்வுகளின்போது ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்பிற்கு அனுமதி மறுத்தமை மற்றும், அகழ்வாய்வுகள் தொடர்பான முடிவுகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த மறுத்தமை அகழ்வுப் பணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த அகழ்வு பணிகளை பார்வையிடுவதற்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் வருகைதந்திருந்தனர்
அதேவேளை இன்று (10.09.2023) அகழ்வுப் பணிகள் எதுவும் இடம்பெறாதெனவும், நாளை (11) ஆம் திகதி ஐந்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.