வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தின் சாதனையாக 15 பேர் தொடர்பாக, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துள்ளதாக கூறப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.ஶ்ரீநேசன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்
குறித்த அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த இத்தகவலைக் கூறியுள்ளதாக அறியப்படுகிறது.30,000 பேர் வரை காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் 3900 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
மேலும் 15 பேர் தொடர்பாக அவர்களுக்கு,என்ன நடந்தது என்று மகேஷ் கட்டுலந்த விளக்கியுள்ளார்.
ஒருவர் இறந்துள்ளதாகவும் 11 பேர் இலங்கையில் இருப்பதாகவும்,3 பேர் வெளிநாடுகளில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.அவர்கள் தொடர்பான தகவல்கள் கூட இன்னும் வெளிவரவில்லை.
இப்படித்தான் ஒரு தடவை அரசின் சார்பான பிரதிநிதிகளின் கருத்துகள் வெளிவந்தன.அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கடத்தப்பட்ட இடதுசாரி சோசலிச அரசியல் செயற்பட்டாளர்களான லலித்,குகன் உயிரோடு உள்ளதாகக் கூறப்பட்டது.மேலும் ஊடகவியலாளர் எக்னலிகொட உயிரோடு இருப்பதாக சட்டமா அதிபராக இருந்த ஒருவர் ஜெனிவாவில் கூறியிருந்தார்.ஆனால் அவர்கள் இதுவரை திரும்பவில்லை.
இவ்வாறாக அரசின் சார்பான அதிகாரிகள் கூறுவது உள்நாட்டு மக்களை மட்டுமல்லாது, சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதாகவே உள்ளது.
இதனால்தான் தமிழர்கள் அரசின் உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்துள்ளனர். குற்றவாளிகளைப் பாதுகாப்பதாகவும், குற்றம் இழைத்த பிரிவினரே நீதி விசாரணைக்கு நியமிக்கப்படுவதாகவும் தமிழ் மக்கள் பலமாகச் சந்தேகப்படுகின்றனர்.
காணாமல் போனவர்களை மறந்து விடுமாறு ஜனாதிபதியாக இருந்த கோத்தா கூறியிருந்தார். காணாமல் போனவர்களை மண்ணைத் தோண்டிப் பாருங்கள் என்று முன்னாள் அமைச்சர் வீரவன்ச கூடியுள்ளார். தமிழர்களின் பிரச்சினை சோறும் தண்ணியுமந்தான் என்று முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த கூறியுள்ளார்.
இவற்றையெல்லாம் ஆமோதிப்பவர்களாக பதவிக்காக ஏங்கும் தமிழ் அமைச்சர்கள் உள்ளார்கள். இதனால் தமிழ் மக்கள் அரசின் சார்பான அமைச்சர்களிலோ, அதிகாரிகளிலோ, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பான அலுவலகத்திலோ துளியளவும் நம்பிக்கை கொள்ளவில்லை.
இந்த படிப்பினையால்தான் தமிழர்கள் நீதியான சர்வதேச விசாரணையை எதிர்பார்க்கின்றனர். 1956,1958,1961,1964,1974, 1977,1983,1984 –2009 வரை தமிழினப் படுகொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் உள்நாட்டுப் பொறிமுறைக்குட்பட்ட விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டது மிகக் குறைவாகும். விசாரிக்கப்பட்டாலும் தண்டிக்கப்பட்டது மிகமிகக்குறைவாகும்.
அவ்வாறு தண்டிக்கப்பட்டவர்கள் கூட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு மூலமாக தண்டனைகளில் இருந்து விடுபட்டு விடுகின்றார்கள்.இதனால் தமிழர்கள் அரசு மீது முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனர் என்றார்.
https://youtu.be/Fmlur2qUDTg