முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் (28) அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்தனர்.
குருந்தூர் மலை பகுதியிலே 1933.05.12 அன்று வர்த்தமானி ஊடாக 78 ஏக்கர் 2 ரூட் 12 பேர்ச் காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்காக எடுக்கப்பட்டிருந்தது.
https://youtu.be/7ATE-NAxrrA
தற்போது குறித்த பகுதியில் தமிழ் மக்கள் வாழ்ந்த பூர்வீக காணிகள் வயல் நிலங்கள் உள்ளடங்களாக மேலும் 306 ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிப்பதற்காக எல்லை கற்களை போட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மக்கள் தங்களது காணிகளை மீட்டுத் தருமாறு தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் கடந்த 16.08.2023 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போது குறித்த பகுதியை நேரடியாக விஜயம் செய்து இது தொடர்பில் முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய இன்றையதினம்(28) குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம. உமாமகள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினுடைய மன்னார், வவுனியா ,முல்லைத்தீவு மாவட்டங்களின் உதவிப் பணிப்பாளர் ஆர்.டி.ஜெயதிலக, மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினுடைய அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், கமநல சேவை திணைக்கள அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட கிராம மக்கள் சென்று நேரடியாக குறித்த காணிகளை பார்வையிட்டிருந்தனர்.
இருப்பினும் குறித்த காணிகளில் விடுவிக்க கூடிய காணிகள் தொடர்பில் எந்தவிதமான சாதகமான பதில்களும் எட்டப்படாத நிலையில் இன்றைய அவதானிப்புகளின் அடிப்படையில் குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தி அதனூடாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அங்கு தீர்மானிக்கப்பட்டது.