திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் விகாரையின் நிர்மாணப் பணி இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் சிலர் இன்று (12) இலுப்பைக்குளம் பகுதியில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“சிங்கள, தமிழ், முஸ்லிம் சகோதரத்துவத்தைக் குழப்புகின்ற ஆளுநரை உடனடியாக வீட்டுக்கு அனுப்புவோம்”, “புத்தசாசன அமைச்சால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்தச் சம்பந்தன் யார்?” போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலாவெளி பெரியகுளம் பகுதியில் 500 இற்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்களும், இரு சிங்களக் குடும்பங்களும் வசித்து வருகின்றன. இந்நிலையில் விகாரை நிர்மாணிப்புப் பணிகளை நிறுத்துமாறு கோரி அங்கு வாழும் தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
விகாரை நிர்மாணப் பணிகள் தொடருமாக இருந்தால் இப்பிரதேசத்தில் இன முறுகல் ஏற்படக்கூடும் என்பதால் கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களின் நலன்களைப் பேணும் ஆளுநர் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் இன முறுகல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் முகமாக விகாரையின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார் என்று ஆளுநரின் ஊடகப் பிரிவு விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
https://youtu.be/KSJzcmcM3a4