மக்கள் சார்ந்து கதைக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை முடிந்தால் கைது செய்யுங்கள் பார்க்கலாம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகரவிற்கு சவால் விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16) இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர அவர்கள் கடந்த காலங்களிலே பல கருத்துக்களை கூறி வருகிறார்.
குறிப்பாக தமிழ் பிரதேசங்களிலே நடைபெறுகின்ற அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், மாகாண சபை முறையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் அவருடைய கோரிக்கை இருந்தது.
சரத் வீரசேகர அவர்கள் இராணுவத்தில் ரொட்டி சுட்டார் போல் தெரிகிறது. ஏனென்றால் மக்களுடைய பிரச்சினை என்பது காலாகாலமாக இருந்து வருகின்ற பிரச்சினை.
நாடாளுமன்றத்திற்கு மக்கள் அனுப்புவது மக்களுடைய பிரச்சினைகளை பேசுவதற்கும், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டி கேட்பதற்குமே நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புவது மக்களுடைய முறைமையாக இருக்கிறது.
ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தேசத்திலே இருக்கின்ற மக்களுடைய பிரச்சினைகளை கதைக்கின்ற நிலையிலே இவர் யார்? இவருக்கு என்ன ஜோக்கியம் இருக்கிறது? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கின்றார்.
முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும். அவருக்கு நான் சவால் விடுகிறேன். இந்த மக்கள் சார்ந்து கதைக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுங்கள் பார்க்கலாம். அடுத்தது என்ன நடக்கும் என மேலும் தெரிவித்தார்.